உடல் எடை குறைவதும் கொழுப்பு குறைவதும் ஒன்றா? சாதம், சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டே குறைக்க முடியுமா? 10 கேள்வி - பதில்

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யத் தொடங்கியவுடன், பல்வேறு ஆலோசனைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கிவிடும். சிலர் சப்பாத்தி, சாதம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்வார்கள். வேறு சிலர் இடைவெளி விட்டு உண்ணும் முறை (Intermittent Fasting) பரிந்துரைப்பார்கள்.
உண்ணாவிரதம் இருப்பது அல்லது திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்வதுதான் விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவும் என்றும் சிலர் கூறுவார்கள்.
ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நமக்குப் பிடித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து பசியுடன் இருக்க வேண்டுமா?
உடல் எடையைக் குறைப்பதும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதும் ஒன்றுதானா?
இவை இரண்டும் வெவ்வேறானவை என்றால், நாம் உண்மையில் கொழுப்பைக் குறைக்கிறோமா அல்லது தசைகள் மற்றும் உடலில் உள்ள நீரின் அளவைத்தான் இழக்கிறோமா என்பதை எப்படிக் கண்டறிவது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக, மருத்துவ நிபுணரும் உணவியல் வல்லுநருமான ஷிகா ஷர்மாவிடம் பிபிசி பேசியது.
உடல் எடை குறைவதற்கும் உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கும் என்ன வித்தியாசம்?
உடல் எடை குறைவதற்கும் கொழுப்பு குறைவதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகிறார்.
இதை விளக்குவதற்காக அவர் இரண்டு விதமான நபர்களைக் கற்பனை செய்துகொள்ளச் சொல்கிறார். முதல் நபர் உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
ஆனால், அவருக்கு வலுவற்ற தசைகள், பொலிவிழந்த முகம், நோய்வாய்ப்பட்டவர் போன்ற தோற்றம் இருக்கிறது.
இரண்டாவது நபரின் முகம் பொலிவுடன் இருக்கிறது. தசைகள் வலுவாக உள்ளன. உடல் தோரணையும் உறுதியாக இருக்கிறது. அவர் வெறுமனே ஒல்லியாக இருப்பவராக இல்லாமல், ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டவராகத் தெரிகிறார்.
பொதுவாக, மக்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள் என்கிறார் டாக்டர் ஷர்மா.
அதற்காக உடலின் ஒட்டுமொத்த எடையையும் குறைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் விரும்புவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமான தோற்றத்தைப் பெறுவதைத்தான்.
"நீங்கள் கொழுப்பைக் குறைக்க விரும்பினால், உடல் எடையைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்" என்கிறார் அவர்.
ஒருவர் எடை பார்க்கும் இயந்திரத்தில் நிற்கும்போது, அது உடலில் உள்ள கொழுப்பின் எடையை மட்டும் அளவிடுவதில்லை.
எலும்புகள், உடலில் உள்ள நீர், உள்ளுறுப்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றின் எடையும் அதில் அடங்கும்.
கொழுப்பை அவர் பஞ்சுடன் ஒப்பிடுகிறார்.
பஞ்சு குறைந்த எடையைக் கொண்டிருந்தாலும் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும். அதுபோலவே, கொழுப்பும் ஒப்பீட்டளவில் குறைந்த எடையைக் கொண்டிருந்தாலும் உடலில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பது அவரது விளக்கம்.
எனவே, உடலில் உள்ள கொழுப்பு குறைவதை மதிப்பிடுவதற்கு எடை பார்க்கும் இயந்திரத்தை மட்டும் நம்பாமல், அளவுநாடாவைப் பயன்படுத்தி உடலின் சுற்றளவையும் அளவிடலாம் என அவர் பரிந்துரைக்கிறார்.
இதனால்தான் சில நேரங்களில் ஒருவரின் உடல் எடை மாறாமல் இருந்தாலும், அவர் அணியும் ஆடைகள் தளர்வாக இருக்கலாம். இது உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் அவர்.
"உலகம் விரும்புவது கொழுப்பைக் குறைப்பதைத்தான். ஆனால், அவர்கள் செய்வது உடல் எடையைக் குறைப்பதை" என்கிறார் டாக்டர் ஷர்மா.
கலோரிகளைக் குறைப்பதுதான் தீர்வா?
உடல் எடையைக் குறைப்பது குறித்துப் பேசும்போதெல்லாம் கலோரிகளைக் கணக்கிடுவது பற்றிய விவாதம் எழுகிறது.
உணவின் மூலம் எவ்வளவு கலோரிகள் கிடைக்கின்றன, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியின் மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பதை மொபைல் செயலிகள் காட்டுகின்றன.
ஆனால், கலோரிகளைக் கணக்கிட்டு உணவைக் குறைப்பதை மட்டுமே தீர்வாகக் கருதும் அணுகுமுறையுடன் டாக்டர் ஷர்மா உடன்படவில்லை.
உணவின் அளவையும் கலோரிகளையும் மட்டும் குறைப்பது உடலில் உள்ள கொழுப்புடன் சேர்த்து தசைகளின் அளவையும் குறைக்கக்கூடும் என்கிறார் அவர். இதனால் ஒருவர் உடல் வலிமையை இழந்து, பலவீனமாகத் தோன்றலாம்; பலவீனமாகவும் உணரலாம்.
கலோரிகள் என்ற கருத்தின் வரலாற்றை நீராவி இயந்திரத்துடன் அவர் தொடர்புபடுத்துகிறார்.
நிலக்கரியை எரிப்பதன் மூலம் எவ்வளவு ஆற்றல் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து இந்த அணுகுமுறை உருவானதாக அவர் கூறுகிறார்.
பின்னர், இதேபோன்ற கணக்கீட்டு முறைகள் உணவுக்கும் மனித உடலுக்கும் பயன்படுத்தப்பட்டன என்பது அவரது விளக்கம்.
ஆனால், நீராவி இயந்திரத்தில் எரிபொருளை எரிப்பதும் மனித உடலில் உணவு ஆற்றலாக மாற்றப்படுவதும் ஒரே மாதிரியான செயல்முறைகள் அல்ல என்று அவர் வாதிடுகிறார்.
மனித உடலில் உணவு ஆற்றலாக மாற்றப்படும் செயல்முறை வளர்சிதை மாற்றம் (Metabolism) எனப்படுகிறது. இயந்திரத்தில் எரிபொருள் எரிக்கப்படும் விதம் இதிலிருந்து வேறுபட்டது.
இதற்கு அவர் ஓர் உதாரணத்தையும் கூறுகிறார். ஒருவர் குறிப்பிட்ட கலோரி அளவுக்குள் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் ஃபட்ஜ் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
கலோரிகளைக் குறைப்பதால் மட்டும் ஆரோக்கியமான முறையில் கொழுப்பைக் குறைத்துவிட முடியாது.
நீண்ட காலத்துக்கு நல்ல பலனைப் பெறுவதற்கு உணவின் அளவுடன் அதன் தரம், ஊட்டச்சத்துகள் மற்றும் உடலின் தேவைகள் ஆகியவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
உடலில் சேரும் எல்லா வகையான கொழுப்புகளும் ஒன்றா?
உடலில் உள்ள கொழுப்பைப் பற்றி விளக்கும்போது, தோலுக்கு அடியில் சேமிக்கப்படும் கொழுப்பையும் உள்ளுறுப்புகளைச் சுற்றிச் சேரும் கொழுப்பையும் டாக்டர் ஷர்மா வேறுபடுத்திக் காட்டுகிறார்.
தோலுக்கு அடியில் சேரும் கொழுப்பு முகத்தையும் உடலையும் சற்று பருமனாகக் காட்டலாம்.
உள்ளுறுப்புகளைச் சுற்றிச் சேரும் கொழுப்பு, உடலின் வெளிப்புறத் தோற்றத்தைப் பொறுத்தவரை அவ்வளவாகத் தெரியாமல் இருக்கலாம். ஒருவரின் கைகளும் கால்களும் ஒல்லியாக இருந்தாலும், வயிறு மட்டும் பெரிதாக இருக்கலாம்.
வயிற்றுப் பகுதியில் உள்ளுறுப்புகளைச் சுற்றிச் சேரும் இந்தக் கொழுப்பு உடல்நலத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் அவர்.
இதய நோய், நீரிழிவு மற்றும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்தல் போன்ற பிரச்னைகளுடன் இதற்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒருவரின் உடல் அமைப்பு மற்றும் மரபணுக்கள் உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது என்பதைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கலாம். குடல் ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன்களும் முக்கியமானவை என்கிறார் அவர்.
பெண்களின் ஹார்மோன் அளவுகள் காலப்போக்கில் மாறுகின்றன. ஆண்களிடம் வயதுக்கு ஏற்ப தசைகளின் அளவு குறையும்போது, ஹார்மோன்களிலும் உடலில் கொழுப்பு சேமிக்கப்படும் விதத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த உரையாடலின்போது, தேசிய குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) தரவுகளைச் சுட்டிக்காட்டிய பிபிசியின் நிதின் ஸ்ரீவஸ்தவா, இந்தியாவில் சுமார் 30 சதவீத பெண்களும் 27 சதவீத ஆண்களும் அதிக உடல் எடை கொண்டவர்களாகப் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இது கவலைக்குரிய நிலை எனக் கூறும் டாக்டர் ஷர்மா, இந்தப் போக்கு தொடர்ந்தால் நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களின் சுமை அதிகரிக்கக்கூடும் என்கிறார்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்காகத் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் இந்தப் பிரச்னை அதிகரிப்பதற்கான காரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.
பொட்டலங்களில் விற்கப்படும் பிரெஞ்சு ஃபிரைஸ், சலாமி, சாசேஜ்கள், குளிர்பானங்கள் மற்றும் பாலாடைக்கட்டிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றையும் அவர் உதாரணமாகக் கூறுகிறார்.
ஒருவர் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதை மட்டும் பார்க்காமல், என்ன சாப்பிடுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும் என்பதே அவரது கருத்து.
கொழுப்பைக் குறைக்க சப்பாத்தி, சாதத்தைத் தவிர்க்க வேண்டுமா?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சப்பாத்தி, சாதம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்ற ஆலோசனை அடிக்கடி வழங்கப்படுவதால், அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், டாக்டர் ஷர்மாவின் பதில் எளிமையானது: "சப்பாத்தி, சாதத்தைத் தவிர்க்க வேண்டாம்; அவற்றைத் தயாரிக்கும் முறையையும் தேர்ந்தெடுக்கும் வகையையும் மாற்றுங்கள்."
சப்பாத்தி தயாரிக்கும்போது தவிடு நீக்கப்படாத மாவைப் பயன்படுத்த அவர் பரிந்துரைக்கிறார். கோதுமை மாவுடன் பார்லி, சிறுதானியங்கள் அல்லது கடலை மாவைக் கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் சப்பாத்தியில் புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளின் அளவை அதிகரிக்க முடியும் என்கிறார் அவர்.
கோதுமை உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். எனவே, சப்பாத்தியை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அதற்குப் பயன்படுத்தும் மாவின் வகையை மாற்றலாம் என்பது அவரது பரிந்துரை.
அரிசியைப் பொறுத்தவரை, பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்குப் பதிலாக, பாலிஷ் செய்யப்படாத அரிசியையும் பழைய அரிசியையும் பயன்படுத்த அவர் பரிந்துரைக்கிறார்.
ஆயுர்வேதத்தில் புதிய அரிசியைவிடப் பழைய அரிசி சிறந்ததாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
புதிய அரிசி உடலில் நீர்ச்சேர்க்கையையும் வாயுத் தொல்லையையும் அதிகரிக்கக்கூடும் என்றும், பழைய அரிசியின் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.
பழுக்காத பழத்துக்கும் பழுத்த பழத்துக்கும் இடையிலான வேறுபாட்டுடன் இதை அவர் ஒப்பிடுகிறார். காலப்போக்கில் அரிசியிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது அவரது விளக்கம்.
சாப்பிடுவதற்கு ஏற்ற நேரம் எது?

பட மூலாதாரம், Getty Images
"காலை உணவை அரசனைப் போலவும், மதிய உணவை அரசியைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்" என்ற பழமொழி சரியானது என டாக்டர் ஷர்மா கருதுகிறார்.
காலையில் உடலின் செரிமானச் செயல்பாடு தொடங்கி, நண்பகலில் அதன் திறன் உச்சத்தை அடைகிறது என்றும், சூரியன் மறையத் தொடங்கும்போது அது படிப்படியாகக் குறைகிறது என்றும் அவர் கூறுகிறார்.
காலையில் முதலில் லேசான ஒன்றை உட்கொண்டுவிட்டு, பின்னர் காலை உணவைச் சாப்பிடலாம் என அவர் பரிந்துரைக்கிறார். மதிய உணவைப் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் சாப்பிடலாம்.
மாலையில் பசி எடுத்தால் வேர்க்கடலை அல்லது வறுத்த கொண்டைக்கடலை போன்றவற்றைச் சாப்பிடலாம். இரவு உணவை மாலை 7 மணிக்குள் சாப்பிட முயற்சி செய்யலாம் என்கிறார் அவர்.
இரவு நேரத்தில் கனமான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, எளிதில் செரிமானமாகக்கூடிய லேசான உணவைச் சாப்பிடுவது சிறந்தது.
இருப்பினும், மாலை 7 அல்லது 8 மணிக்குப் பிறகு சாப்பிடவே கூடாது என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் அதிகமான உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது அறிவுரை.
இன்றைய காலகட்டத்தில் பலர் காலையில் சரியாகச்சாப்பிடுவதில்லை என்று டாக்டர் ஷர்மா கூறுகிறார்.
''பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். மதிய உணவைப் பிற்பகல் 2 அல்லது 3 மணிக்குச் சாப்பிடுகிறார்கள். இரவு உணவை 11 மணிக்கு உட்கொள்கிறார்கள்.''
இத்தகைய பழக்கங்கள் உடலின் இயல்பான சுழற்சிக்கு மாறானவை என்கிறார் அவர்.
அன்றாட உணவில் எவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்?
ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வேறுபட்டது என்பதையும் டாக்டர் ஷர்மா சுட்டிக்காட்டுகிறார்.
ஒருவருக்குப் பொருத்தமான உணவு மற்றொருவருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், துளசி, இஞ்சி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கும் மூலிகைப் பானத்துடன் நாளைத் தொடங்கலாம் என அவர் பரிந்துரைக்கிறார். அதன் பிறகு தேநீர் அல்லது காபி அருந்தலாம்.
காலையில் பழங்களைச் சாப்பிடுவதுடன், தினமும் குறைந்தது ஒரு பழத்தையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
அதிக அளவிலான காலை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான இரண்டு உணவு வேளைகளைத் திட்டமிட்டுக்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார்.
காலை உணவாக வேர்க்கடலை சேர்த்த அவல், கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு அடை, இட்லி, கேழ்வரகு இட்லி, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, வேகவைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
மதிய உணவில் கீரை வகைகள் மற்றும் மற்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்குப் பிசையும் மாவுடன் பருப்பு வகைகளையும் சேர்க்கலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
மாலையில் வறுத்த கொண்டைக்கடலை அல்லது வேர்க்கடலையைச் சாப்பிடலாம். இரவு உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு சூப் அருந்தலாம் என்றும் அவர் கூறுகிறார். இதனால் கடுமையான பசியின் காரணமாக அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும் என்பது அவரது கருத்து.
வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி போன்ற பச்சைக் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள அவர் வலியுறுத்துகிறார். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகளையும் அவர் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
இவை இதயம், குடல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும் என்கிறார் அவர்.
உணவுக் கட்டுப்பாடு முக்கியமா, உடற்பயிற்சி முக்கியமா?

உடல் எடையைக் குறைப்பதைவிட உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதே முக்கியம் என்பதை டாக்டர் ஷர்மா மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஆரம்பத்தில் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொழுப்பை விரைவாகக் குறைக்க முடியும். ஆனால், அந்த மாற்றத்தை நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் என்கிறார் அவர்.
உடற்பயிற்சி தசைகளை வலுப்படுத்துவதுடன், உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்யாமல் சமோசா போன்றவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம் என்று நினைப்பதும், உடல் செயல்பாடுகள் எதுவுமின்றி உணவுப் பழக்கத்தை மட்டும் மாற்றினால் போதும் என்று கருதுவதும் தவறான அணுகுமுறைகள் என்கிறார் அவர்.
தினமும் 10,000 அடிகள் நடப்பது குறித்துப் பேசும்போது, நடப்பது என்பது உடலால் இயல்பாகச் செய்யக்கூடிய எளிய செயல்பாடுகளில் ஒன்று என்கிறார் டாக்டர் ஷர்மா.
பெரும்பாலான ஆரோக்கியமானவர்களுக்கு இந்த இலக்கு எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கலாம்.
உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வது, ஏரோபிக்ஸ் அல்லது யோகா செய்வது ஆகியவற்றையும் அவர் ஊக்குவிக்கிறார். இவற்றில் எதையும் செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் தினமும் 10,000 அடிகளாவது நடக்க முயற்சி செய்யலாம் என்கிறார்.
விரைவாக உடல் எடையைக் குறைப்பது எந்த அளவுக்குப் பயனளிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் படிப்படியான, சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என டாக்டர் ஷர்மா பரிந்துரைக்கிறார்.
விரைவாக உடல் எடையைக் குறைக்கும்போது ஆரம்பத்தில் தசைகளின் அளவும் குறையக்கூடும். பின்னர் அவற்றை மீண்டும் வலுப்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
விரைவாக உடல் எடையைக் குறைத்த சிலருக்குச் சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பைக் கற்கள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டதைத் தாம் பார்த்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இளம் வயதில் ஒருமுறை ஏற்படும் விரைவான உடல் மாற்றத்தை உடல் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், அதே மாற்றத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்கிறார் அவர்.
எனவே, உணவின் தரத்தை மேம்படுத்துவது, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
வயதான காலத்திலும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இவையே சிறந்த வழிகள் என்பது அவரது கருத்து.
இடைப்பட்ட நேர உண்ணாவிரதமும் வார இறுதிகளில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும்
இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தை (Intermittent Fasting) உடல் எடையைக் குறைப்பதற்கான உறுதியான தீர்வாகக் கருதுவதை டாக்டர் ஷர்மா ஏற்கவில்லை.
16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த பிறகு, சிலர் காபி, அடர்த்தியான தேநீர், எண்ணெயில் பொரித்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் அல்லது சாண்ட்விச் போன்றவற்றைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் என்கிறார் அவர்.
நீண்ட நேரம் பட்டினி கிடந்துவிட்டு, பின்னர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது உடலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதைப் போன்றது என்பது அவரது விளக்கம்.
பல்வேறு கலாசாரங்களில் உண்ணாவிரதத்தை முடிக்கும்போது லேசான உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
பேரீச்சம்பழம், இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு அல்லது பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.
தவறான முறையில் இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தைப் பின்பற்றினால் தசைகள் குறையக்கூடும். கிடைக்கும் பலன்கள் தற்காலிகமானவையாக இருக்கலாம். பின்னர் ஏமாற்றமும் ஏற்படலாம் என்கிறார் அவர்.
வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றிவிட்டு, வார இறுதியில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதையும் அவர் இதேபோலப் பார்க்கிறார்.
திருமணம் அல்லது திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் எப்போதாவது வழக்கத்தைவிடச் சற்று அதிகமாகச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும் இதையே பழக்கமாக்கிக்கொள்வது உடலுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதைப் போன்றது என்கிறார் அவர்.
வானிலை மாற்றங்களால் ஒரு பாறை சிறிது சிறிதாகச் சிதைவதுடன் இதை ஒப்பிடுகிறார். உடல் ஒரு தீவிர நிலையிலிருந்து மற்றொரு தீவிர நிலைக்குத் தாவாமல், சமநிலையைப் பேண வேண்டும் என்பதே அவரது கருத்து.
நாளை முதல் கொழுப்பைக் குறைக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் வீட்டுச் சூழலை மாற்ற வேண்டும் என டாக்டர் ஷர்மா பரிந்துரைக்கிறார்.
குளிர்சாதனப் பெட்டியில் சாலட் மற்றும் பழங்களை வைத்திருக்க வேண்டும்.
சாக்லேட், இனிப்புகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆசையைத் தூண்டும் உணவுகள் கண்ணில் படும் இடத்தில் இருந்தால் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது கடினமாக இருக்கும் என்கிறார் அவர்.
இரண்டாவதாக, உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தண்ணீருடன் மூலிகைப் பானங்கள், எலுமிச்சைப் பழச்சாறு அல்லது இளநீர் ஆகியவற்றையும் பருகலாம். தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சிறிதளவு தண்ணீர் குடிக்க அவர் பரிந்துரைக்கிறார்.
சில நேரங்களில் உடலுக்குத் தண்ணீர்தான் தேவைப்படும்.
ஆனால், அதைத் தவறாகப் பசியாகப் புரிந்துகொண்டு சிப்ஸ் அல்லது சாக்லேட் போன்றவற்றைச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள் என்கிறார் அவர்.
மூன்றாவதாக, உணவு உண்பதைத் தண்டனையாகவோ தவமாகவோ கருதக்கூடாது. இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், அத்திப்பழம், உலர் திராட்சை, மாம்பழம் போன்ற இயற்கையாக இனிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் அவர்.
வேகவைத்த சுரைக்காய் அல்லது சௌசௌ போன்ற சுவையற்ற உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நீண்ட காலத்துக்குப் பின்பற்றக்கூடிய வழிமுறை அல்ல. உணவு சுவையாக இருக்க வேண்டும். ஆனால், சுவை என்றால் சாக்லேட்டும் சிப்ஸும் மட்டுமல்ல என்கிறார் அவர்.
உணவுக் கட்டுப்பாடு என்பது குறைவாகச் சாப்பிடுவது மட்டுமல்ல; சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் உணவை உட்கொள்வதும்தான்.
"உணவு உண்பதை ஒரு தவமாக மாற்றிவிடாதீர்கள்" என்பதே டாக்டர் ஷிகா ஷர்மாவின் செய்தி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































